முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்
முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான் என்பதன் பொருள் என்னவென்றால் ஒருவன் இவ்வளவு மகத்துவம் உள்ள முருங்கையை உண்டு வந்தால் அவன் முதுமையில் கோல் ஊன்றாமல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்வான் என்பதாகும்.
முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்
முருங்கையில் பல ஊட்டச்சத்துக்கள் இருந்தும் ஏன் முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்ற விளக்கத்தை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.
முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்:
இதன் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் ,முருங்கை பிசின் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை என்பதால் சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்று அழைக்கின்றனர். முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, வைட்டமின் சி, புரதம், பொட்டாசியம், நார்சத்து போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. மற்ற தாவரங்களை விட இதில் 25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.
முருங்கையின் நன்மைகள்:
முருங்கை கீரை : முருங்கை கீரையை பொரியல் அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், இளநரையைப் போக்கும், கண் பார்வைத் திறனை அதிகரிக்கும், முடி உதிர்தலை தடுக்கும், ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும்.
முருங்கை பூ : முருங்கைப் பூவை கஷாயம் செய்து குடித்து வர நரம்புத் தளர்ச்சி நீங்கும், கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும், நினைவாற்றல் அதிகரிக்கும், நரம்புத் தளர்ச்சி நீங்கும், நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
முருங்கை காய் : முருங்கை காயை சாப்பிட்டால் காயிலிருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும், எலும்பு மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
முருங்கை விதை : முருங்கை விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வாதம், முடக்கு வாதம், இளம்பிள்ளை வாதம் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை பிசின்: முருங்கை பிசினை நல்லெண்ணையில் கலந்து இரண்டு சொட்டு காதில் விட காது வலி நீங்கும்.
முருங்கை வேர் : முருங்கை வேரின் சாறுடன் பால் சேர்த்து சிறிதளவு குடித்து வந்தால் ஆஸ்துமா, வாதம், முதுகு வலி போன்றவை நீங்கும்.
இதன் தனி சிறப்பு என்னவென்றால் மற்ற கீரைகளைப் போல் அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருக்கும். முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான் என்பதன் பொருள் என்னவென்றால் ஒருவன் இவ்வளவு மகத்துவம் உள்ள முருங்கையை உண்டு வந்தால் அவன் முதுமையில் கோல் ஊன்றாமல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்வான் என்பதாகும். இக்கட்டுரையை படித்தால் மட்டும் போதாது, நீங்கள் இந்த முருங்கையை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் அதுவே இக் கட்டுரையின் வெற்றி.